● வி. சின்னுசாமி ஜோதிடர், மருதமலை.
எனது மானசீக குரு அவர்களுக்குப் பணிவான வணக்கம். திருமணப் பெருத்தம் பார்க்கும்பொழுது பெண்ணின் நட்சத்திரம் தொட்டு எண்ணிவரும் தொகை 1, 3, 5, 7 எனில் தினப்பொருத்தமில்லை என்கிறார்கள். ஒரே ராசி, ஒரே லக்னம், ஒரே யோனியாக இருந் தால் விதிவிலக்கு உண்டா? உதாரணமாக, உத்திராடத்துக்கு அவிட்டம் 3-ஆவது தாரை- விபத்துதாரை. ஒரே ராசி என்பதால் சேர்க்கலாமா? அஸ்வினி நட்சத்திரத்திற்கு விசாகம் 4-ஆம் பாதம் விருச்சிக ராசி 10-ஆவது தாரை (7-ஆவது வதை). விதிவிலக்கு உண்டா? மனைவி கர்ப்பமாக இருக்கும்போது ஆறு தாண்டக்கூடாது என்றும், கடல் ஸ்நானம் செய்யக்கூடாது என்றும் எழுதுகிறீர்கள். இதற்கும் ஏதாவது விதிவிலக்கு உண்டா? முடியாத சூழ் நிலையில் ஆறு தாண்டித்தான் போகும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அதற்கு என்ன பரிகாரம்?
எந்த ஒரு விதி என்றாலும், அதற்கு விதிவிலக்கு என்று ஒன்றுண்டு! புராணத்தில் முனிவர் யாருக்காவது சாபம் கொடுத்துவிட்டால், மன்னிப்பு கேட்டால் அதற்கு சாபவிமோசனம் என்று பரிகாரம் சொல்லுவார்கள். ஆயுள் தண்டனை பெற்ற கைதிக்குக்கூட நன்னடத்தை பேரில், தண்டனைக் காலத்துக்கு முன்பே விடுதலை ஆவது உண்டு. முக்கியமான தலைவர்கள் விழாவன்று அல்லது ஜனாதிபதியின் கருணை மனு உத்தரவின்படி முன்னதாக விடுதலை செய்வ தில்லையா? ஆண்- பெண் இருவருக்கும் ஒரே லக்னம், ஒரே ராசியாக இருந்தால் தினம், கணம், ரஜ்ஜு, வேதை போன்ற பொருத்தம் பார்க்க வேண்டாம்; தோஷமில்லை. அதேபோல, ஒரே நட்சத்திரத்தில் மிகச்சிறந்த நட்சத்திரம் எனப் படும் மிருகசீரிடம், மகம், சுவாதி, அனுஷம் ஆகிய நான்கு நட்சத்திரங்களில் பிறந்தவர் களுக்கு மனப்பொருத்தம் இருந்தாலே போதும். மற்ற பத்துப் பொருத்தங்களும் பார்க்க வேண்டாம். ஆறு மாதம் தாண்டி யதும் கர்ப்பஸ்திரீ கடலில் ஸ்நானம் செய் வதும், ஆறு தாண்டக்கூடாது என்பதும் விதி! கர்ப்பத்துக்கு பிரச்சினைவரும் என்பதற் காகக் கூறப்பட்டது. தவிர்க்கமுடியாத பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களின் ஜாத கப்படி கிரகதோஷப் பரிகாரம் செய்து கொள்ளலாம். இஷ்டதெய்வம், குலதெய்வ வேண்டுதலை நிறைவேற்றலாம். வேதாரண்யத்தில் திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் தங்கியிருந்தசமயம், சம்பந்தப்பெருமானை மதுரை வரும்படி பாண்டியனின் மனைவி அழைப்பு விடுத்தாள். சம்பந்தர், அரசி அழைப்பதாகக் கருதவில்லை.- மதுரை சொக்கநாதர் அழைத்திருப்பதாகக் கருதி, உடனே மதுரை புறப்பட விரும்பினார். மறுநாள் திருவாதிரை நட்சத்திரம். ஆதிரையில் பயணப்பட்டால் அக்னி பயம், அக்னி விபத்து என்பது சாஸ்திரம் என்று அப்பர் சுவாமிகள் தடுத்தார். அப்போதுதான் சம்பந்தர் "ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, பாம்பு இரண்டுமுடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே' என்று கோளறு பதிகம் பாடினார் "வேயுறு தோனிபங்கன் விடமுண்ட கண்டன் உளமே புகுந்த அதனால்' பாதிக்காது என்றார். மதுரை தெற்காவணி மூல விதியில், மதுரை ஆதீனம் இருக்குமிடத்தில் ஓலைவேய்ந்த குடிலில் தங்கினார். சமணர்கள் அவர் இருப்பிடத்துக்கு தீவைத்தார்கள். அதற்கு முன்னதாக சோமசுந்தரக் கடவுள் சம்பந்தரை தன் சந்நிதிக்கு வரும்படி அசரீரியாகக் கூற, சம்பந்தப்பிள்ளை எரியும் குடிசையை விட்டு வெளியேறி சொக்கநாதர் சந்நி திக்குப் போய்விட்டார். சாஸ்திரம் பொய் யாகாமல், அக்னி பயமும் ஏற்பட்டது. தெய்வ பலமும் பொய்யாகாமல், உயிர்ஆபத்துக்கு இடமில்லாமல் பாதுகாப்பும் ஏற்பட்டது. ஆக, எந்த ஒரு சிக்கலுக்கும் கோளறு பதிகம் பாடிச் சென்றால் சிவனருள் நமக்கு வழித்துணையாக வந்து காப்பாற்றும். அதேசமயம் மனைவியோ, வீட்டிலுள்ள பெண்களோ கர்ப்பமாக இருக்கும்போது மட்டும் கண்டிப்பாக கிணறு தோண்டக்கூடாது. வீட்டு வேலை ஆரம்பிக்கக் கூடாது. இதற்குப் பரிகாரமில்லை.
● து. மதியழகன், சென்னை-600 044.
எனது மகன் வேணுகோபால் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிகிறான். வேறு நிறுவனம் மாறமுடியுமா? அவனுக்குத் திருமணம் எப்போது நடக்கும்? சொந்த வீடு கட்டுவானா? "நாகதோஷம் இருப்பதாக ஜோதிடர்கள் சொல்லி காளஹஸ்தியும் ஸ்ரீரங்கமும் சென்று பரிகாரம் செய்து விட்டோம்.
வேணுகோபால் மிருகசீரிட நட்சத்திரம், ரிஷப ராசி, சிம்ம லக்னம். நடப்பு வயது 27. வரும் செப்டம்பரில் 28 ஆரம்பம். மகரச் சனியை மிதுனச் செவ்வாய் பார்ப்பதால் 30 வயது முடிந்துதான் திருமணம் புரியவேண்டும். அதற்குள் அட்டமச்சனியும் 2020-ல் முடிந்துவிடும். 2019 அக்டோபரில் குரு தசை, தனது புக்தி முடிந்ததும் நல்ல கம்பெனி, நல்ல வேலை அமையும். முடிந்தால் புரட்டாசியில் (செப்டம்பரில்) அவர் ஜென்ம நட்சத்திரத்தன்று காரைக்குடியில் காமோ கர்ஷண ஹோமமும், கந்தர்வராஜ ஹோமமும் செய்து அவருக்கு கலச அபிஷேகம் செய்யலாம். அத்துடன் 19 அல்லது 21 வகையான ஹோமங் கள்- தொழில் உயர்வு, ஆயுள் தீர்க்கம், ஆரோக்கியம், சம்பாத்தியம், சொந்த வீடு போன்றவற்றுக்காக செய்துகொள்ளலாம். சுந்தரம் குருக்கள், செல்: 99942 74067-ல் பேசவும். முன்னதாக 28 வயதில், மகனுக்குப் பெண் அமையலாம்.
● எஸ். ராஜகோபால், விருதுநகர்.
எனக்கு 54 வயது. இந்த வயதிலும் தந்தைக்கு அடிமையாக இருக்கிறேன். எனக்கு ஆண் ஒன்று, பெண் ஒன்று என்று இரண்டு குழந்தைகள். இருவரும் படிக் கிறார்கள். கடைவைத்து நடத்துகிறேன். சரியான வருமானமில்லை. தந்தையிடம் கையேந்தும் நிலை. பல கோடிக்கு சொத்து இருந்தும் அனுபவிக்க முடியவில்லை. அதை எப்போது அனுபவிக்கலாம்? வாரம் நான்கு விளக்கேற்றி வழிபடுகிறேன். வேறு பரிகாரம் தேவையா?
54 வயதுவரை, உங்களைப் பெற்று, வளர்த்து, திருமணம் செய்துவைத்து, இரண்டு குழந்தைக்கு தகப்பனாராக ஆளாக்கிய தகப்ப னாருக்கு நீங்கள் அடிமையாக இருப்பதில் எந்த தவறுமில்லை. (அற்ப சம்பளம் கொடுத்து வேலை வாங்கும் முதலாளிக்கு- அந்நியருக்கு அடிமையாக இருப்பதைவிட, பிறவிக்குக் காரண மான அப்பாவுக்கு அடிமையாக இருப்பது தவறில்லையல்லவா.) "மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை எந்நோற்றான் கொல்' என்று வள்ளுவர் சொல்லுவார். அதாவது இந்தப் பிள்ளையைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்று மாற்றார் போற்றுமளவு நடப்பதுதான் மகன் கடமை. பெற்ற தாயும் தந்தையும் போற்ற வாழும் எந்தப் பிள்ளைக்கும், எப்போதும் எந்த சங்கடமும் வராது. ராஜகோபாலன் தனுசு லக்னம், தனுசு ராசி. 9-க்குடைய சூரியனும், 10-க்குடைய புதனும் ஒன்றுகூடி 10-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். இப்போது உங்களுக்கு ஜென்மச்சனி நடக்கிறது. இன்னும் நான்கு ஆண்டுகள் பொறுமையாக இருங்கள். சனி விலகியதும் உங்களுக்கும், உங்கள் வாரிசுகளுக்கும் சேரவேண்டிய பங்கு பாகங் களை உங்கள் தகப்பனார் தருவது உறுதி! அதற்காக அவரிடம் நீங்கள் வம்பு வழக்கு ஏற்படுத்த வேண்டாம். அழும் குழந்தைக்கு எப்போது பால் தரவேண்டுமென்று பெற்ற தாய்க்குத் தெரியும். அதேபோல பிறந்த பிள்ளைக்கு எப்போது சொத்து எழுதிவைக்க வேண்டுமென்று தந்தைக்குத் தெரியும். அதுவரை நம்பிக்கையோடு காத்திருங்கள். வாய்ப்பு கிடைத்தால் பாளையங்கோட்டை- திருச் செந்தூர் பாதையில்உள்ள வல்லநாடு சென்று சாதுசிதம்பர சுவாமிகளை மனமுருகப் பிரார்த்தனை செய்யுங்கள். தன் பெற்றோருக்கும் ஜீவசமாதி அமைத்து, தானும் ஜீவசமாதியான மகான்! அதை முருகன் என்ற அன்பர் நிர்வாகம் செய்கிறார். தினமும் ஆயிரக் கணக்கானோருக்கு அன்னதானம் நடக்கிறது.
● கே. சாந்தகுமாரி, நெற்குன்றம்.
என் மகன் பிரகாஷ் திருமணம் நடந்து நான்காவது வருடம் நடக்கிறது. மகன்- மருமகள் இருவருக்கும் அடிக்கடி சண்டை, சச்சரவு ஓயவில்லை. குழந்தை பாக்கியமும் இல்லை. திருமணத் தேதி 30-11-2015. என் கணவர் இறந்துவிட்டார். நான் ஒருத்திதான். மருமகளுக்கும் கொஞ்சம் மனநிலை பாதிப்பு உள்ளது. வைத்தியம் பார்க்கிறோம். அவர்கள் எப்போது மகிழ்ச்சியாக இருப்பார்கள்? எப்போது வாரிசு கிடைக்கும்?
பிரகாஷ் (மகன்) உத்திர நட்சத்திரம், சிம்ம ராசி, கும்ப லக்னம். 31 வயது. மருமகள் புனர்பூச நட்சத்திரம், கடக ராசி, துலா லக்னம். 25 வயது. திருமணத் தேதி கூட்டு எண் 4 குற்றமானது. அத்துடன் மருமகளுக்கு நாகதோஷம் இருப்பதோடு, துலா லக்னத்துக்கு கணவன் ஸ்தானம் 7-ஆம் இடத்தை செவ்வாய், சனி பார்ப்பது தோஷம். தாம்பத்திய ஒற்றுமை இருக்காது. லக்னத்தில் உள்ள குருவும் 7-ஆம் இடத்தைப் பார்ப்பதால் 27 வயது முடிந்து 30-க்குள் திருமணம் செய்திருந்தால் சந்தோஷம் நிலைத்திருக்கும். 21 வயதிலேயே திருமணம் நடந்தது சரியல்ல. 2015-ல் கட்டிய தாலியை உண்டியலில் செலுத்தியோ அல்லது அதை அழித்தோ மறுதாலி கட்டவும். தேதி எண்ணும் கூட்டு எண்ணும் 1, 3, 6 வரும் தேதியில் மறுமாங்கல்யம் கட்டவேண்டும். அதற்குமுன்னதாக காரைக்குடியில் சுந்தரம் குருக்களிடம் புனர்விவாக ஹோமம், சந்தான பரமேஸ்வர ஹோமம், சந்தான கோபால ஹோமம் உட்பட 19 வகையான ஹோமம் செய்து, இருவருக்கும் கலச அபிஷேகம் செய்ய வேண்டும். சுந்தரம் குருக்கள், செல்: 99942 74067-ல் தொடர்புகொள்ளவும். இருவருக்கும் சந்திராஷ்டமம் வராத நாளில் ஹோமம், மறுமணம் செய்யவேண்டும்.